தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் பெறப்படும் மனுக்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் திருப்திகரமான பதிலை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இரா. கோபிநாத் என்பவர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். இருப்பினும், திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் பொதுத் தகவல் அலுவலர் வழங்கிய பதில்கள் திருப்திகரமாக இல்லை என்று கூறி, அவர் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த மாநில தகவல் ஆணையம், கடந்த செப்டம்பர் 24-ம் தேதி இது தொடர்பாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அந்த உத்தரவின் அடிப்படையில், இனிவரும் காலங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு, மனுதாரர் திருப்தியடையும் வகையில் உரிய தகவல்களைக் குறித்த காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை வலியுறுத்தியுள்ளது.
இந்த நடைமுறையை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





