மத்திய அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்களைத் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தும் போக்கு கவலையளிப்பதாக 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக நாட்டில் அரசுக்கு எதிராகக் கேள்வி எழுப்புவது அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தியுள்ளார். 2011-ம் ஆண்டு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, டெல்லி ராமலீலா மைதானத்தில் ஊழலுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதை அவர் கடுமையாகக் கண்டித்ததை அண்ணாமலை சுட்டிக்காட்டினார்.
அப்போது, 'என் கைகள் கட்டப்படாமல் இருந்திருந்தால், நானும் டெல்லிக்குச் சென்று மத்திய அரசுக்கு எதிராகப் போராடியிருப்பேன்' என்று மோடி கூறியிருந்ததை அவர் நினைவுபடுத்தினார். ஆனால், தற்போதைய சூழலில் ஜனநாயக ரீதியாகக் கேள்வி எழுப்புபவர்கள் 'வெளிநாட்டு ஏஜென்ட்' என முத்திரை குத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். நீட் தேர்வுப் போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தான் வலியுறுத்தியதிலிருந்தே, தன் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
சிஜேபி அமைப்பின் போராட்ட முறைகளில் தனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், ஒரு பிரச்சினைக்காகக் குரல் கொடுக்கவும் போராடவும் அவர்களுக்கு முழு உரிமை உண்டு என்று அவர் தெரிவித்தார். திசைதிருப்பும் உத்திகளைக் கைவிட்டு, தனது கேள்விகளுக்கு மத்திய அரசு நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். டெல்லி காவல்துறையில் உதவி ஆணையராகப் பணியாற்றுபவரே சிறப்பு நிர்வாக நீதித்துறை நடுவராகவும் செயல்பட்டு, தடுப்புக் காவலில் வைப்பது குறித்து முடிவெடுப்பது எந்த வகையில் நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், நீட் போராட்டத்தின்போது டெல்லி காவல்துறை பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாக எழுந்த புகார்கள் மற்றும் எஸ். ஓ. பி விதிமீறல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்றும் அவர் வினவினார்.
மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினாலோ அல்லது விமர்சனம் வைத்தாலோ, அதை 'தேசவிரோதம்' என்றும் 'வெளிநாட்டுச் சதி' என்றும் முத்திரை குத்துவது சலிப்பை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார். 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் மத்திய அரசு, தனது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளத் தனக்குத்தானே எதிரிகளை உருவாக்கிக் கொள்வது பரிதாபத்துக்குரிய அரசியல் அணுகுமுறை என்று அண்ணாமலை தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார்.



