கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள 5 பேருக்கு வழங்கப்பட்டுள்ள பரோலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்ட இந்த பரோல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1998-ம் ஆண்டு கோவையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 56 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும், பலர் நிரந்தர ஊனமுற்ற நிலையிலும் உள்ளனர். இத்தகைய சூழலில், சொந்தக் காரணங்கள் மற்றும் உடல்நலக்குறைவுக்காக குற்றவாளிகளுக்கு 60 நாட்கள் பரோல் வழங்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாள் கோவையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, பரோலில் விடுவிக்கப்பட்டுள்ள 5 பேரையும் உடனடியாக மீண்டும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.



