வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர். பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் மற்றும் துணைத்தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வார்டு வாரியாக மக்களைச் சந்தித்து அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான களப்பணிகளைத் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
செப்டம்பர் 15-ம் தேதி நடைபெற வேண்டிய ஏரியா சபைக் கூட்டங்கள் நடத்தப்படாததற்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 10-ம் தேதி நடைபெறவுள்ள ஏரியா சபைக் கூட்டங்களை முறையான முன்னறிவிப்புடன் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று வார்டு பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை மற்றும் எல் நினோ பாதிப்பு காலங்களில் நிர்வாகிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7-ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் ரத்த தானம், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் கல்விசார் மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ளவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.





