தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் எஜிப்டை வகை கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நடப்பாண்டில் இதுவரை தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,500-ஐ கடந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மட்டும் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 332 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்புக்காக 6 பேரும், உண்ணி காய்ச்சலுக்கு ஒருவரும், எலி காய்ச்சலுக்கு ஒரு சிறுமியும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள தேவையற்ற பொருட்களில் மழைநீர் தேங்கி, அதில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனைத் தடுக்க அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன' என்று தெரிவித்தனர்.
மேலும், டெங்கு பாதிப்பு கண்டறியப்படும் இடங்கள் குறித்த தகவல்களை உடனடியாகப் பரிமாறவும், அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகளை கையிருப்பில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்கு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள சிமெண்ட் தொட்டிகள், தண்ணீர் தொட்டிகள், ஆட்டுக்கல், பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், தேங்காய் ஓடுகள், வாளி மற்றும் டயர்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
குடியிருப்பு வளாகங்கள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் திரையரங்குகளில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் கண்டறியப்பட்டால், அவற்றை உடனடியாக அகற்றி சரிசெய்ய சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



