தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்), பால் உபரிப் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் கொள்முதல் செலவுகள் அதிகரிப்பு காரணமாக இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விலைப்பட்டியல் அக்டோபர் 28, 2026 முதல் நடைமுறைக்கு வருகிறது.
வெண்ணெய், நெய், குலாப் ஜாமுன், ரசகுல்லா மற்றும் கோவா உள்ளிட்ட 23 வகையான பொருட்களின் விலைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 100 கிராம் வெண்ணெய் 70 ரூபாய்க்கும், 500 மி.லி நெய் 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும். மேலும், 200 மி.லி மோர் பாக்கெட்டின் விலை 2 ரூபாய் வரையிலும், 200 மி.லி மில்க் ஷேக் ரகங்களின் விலை 30 ரூபாயிலிருந்து 35 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தயிர் ஒரு கிலோவிற்கு 10 ரூபாயும், இனிப்பு வகைகள் 250 கிராம் பாக்கெட்டிற்கு 15 முதல் 20 ரூபாய் வரையிலும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் நெய் பாக்கெட்டின் விலை 80 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.



