வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து வருவதால், தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது.
இதன் தாக்கத்தால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 2-ம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. அதேநேரம், சென்னையில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்றும், சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.




