உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகள், எதிர்பாராத நெருக்கடி காலங்களை எதிர்கொள்ளும் வகையில் தங்கள் குடிமக்களையும் பாதுகாப்பு கட்டமைப்புகளையும் தயார்படுத்தும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. அமெரிக்காவின் பென்டகன், தனது முக்கிய ராணுவ தளங்கள் வெளிஉதவி இன்றி 90 நாட்கள் வரை செயல்படும் வகையில் ஆயத்தமாகி வருகிறது.
அதேபோல், பின்லாந்து அரசு 35 லட்சம் அவசரக்கால வழிகாட்டி கையேடுகளை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளது. போலந்து நாடு வான்வழித் தாக்குதல்கள் மற்றும் அவசர காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் பலவும் குடிமக்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன. ஆஸ்திரியா 14 நாட்களுக்கும், ஜெர்மனி 10 நாட்களுக்கும் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைக்க அறிவுறுத்தியுள்ளன. ஸ்வீடன் ஒரு வாரம் நீடிக்கும் வகையில் தயார்நிலையை வலியுறுத்தியுள்ளது. அயர்லாந்து 22 லட்சம் குடும்பங்களுக்கு அவசரக்கால வழிகாட்டிகளை அனுப்பி வருகிறது. ஜப்பான், பிரான்ஸ், பிரிட்டன், நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகள், மின்சாரம், தண்ணீர் அல்லது இணைய சேவை துண்டிக்கப்படும் சூழலில் குறைந்தபட்சம் 72 மணி நேரம் சமாளிக்கும் வகையில் குடிமக்கள் தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
நார்வே இணையம் மற்றும் அலைபேசி சேவை முடக்கம் குறித்த விழிப்புணர்வை முன்னெடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் செஞ்சிலுவைச் சங்கம் உணவு, மருந்து மற்றும் தண்ணீர் இருப்பு வைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.


