அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா தொடர்பான நடைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, விசா நீட்டிப்பு விண்ணப்பங்களை பரிசீலிக்கும்போது, முந்தைய ஒப்புதல்களை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்கும் 'டிஃபரன்ஸ்' (deference) கொள்கையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம், கிரீன் கார்டுக்காக நீண்டகாலமாக காத்திருக்கும் இந்தியர்களுக்குப் பெரும் சவாலாக அமையக்கூடும் என்று கருதப்படுகிறது.
அமெரிக்காவில் எச்-1பி விசா பெறுபவர்களில் 71 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய விதிமுறை குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில், 'டிஃபரன்ஸ்' கொள்கையை நீக்குவது என்பது கிரீன் கார்டு வரிசையில் உள்ளவர்களின் இடத்தையோ அல்லது ஏற்கனவே உள்ள எச்-1பி ஒப்புதல்களையோ உடனடியாகப் பாதிக்காது. இருப்பினும், நிரந்தர குடியிருப்புக்காகக் காத்திருக்கும் காலக்கட்டத்தில், அடுத்தடுத்த விசா விண்ணப்பங்கள் எவ்வாறு மதிப்பீடு செய்யப்படும் என்பதில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக, ஈபி-2 (EB-2) மற்றும் ஈபி-3 (EB-3) பிரிவுகளில் கிரீன் கார்டுக்காகக் காத்திருக்கும் இந்தியர்களுக்கு இந்த மாற்றம் பெரும் சிக்கலை உருவாக்கலாம். இது குறித்து நிபுணர் ஒருவர் கூறுகையில், 'தற்போதுள்ள விசா நீட்டிப்பு நடைமுறையில், முந்தைய ஒப்புதல்கள் சரியாகவே இருக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் புதிய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.
ஆனால், இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால், ஒவ்வொரு விசா நீட்டிப்பும் ஒரு புதிய சோதனையாக மாறும். இதில் சிறப்புத் தொழில் தகுதி, ஊதிய நிலை மற்றும் பணியாளர்-நிறுவன உறவு என அனைத்தும் மீண்டும் மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும்' என்று தெரிவித்தார். பல இந்தியர்கள் ஏசி21 (AC21) சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டு கால நீட்டிப்புகளைப் பெற்று, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நான்கு, ஐந்து அல்லது ஆறு முறை விசா புதுப்பிப்புகளைச் செய்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில், ஒவ்வொரு முறையும் புதிய தகுதிச் சோதனைகளை எதிர்கொள்வது அவர்களுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

