ஈரான் உடனான போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோ கோல்ஃப் எஸ்டேட் மற்றும் வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள டொனால்ட் ஜே. ட்ரம்ப் சர்வதேச விமான நிலையம் ஆகிய பகுதிகளில் புதிய வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இது பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி என்று அமெரிக்க ரகசிய சேவை (US Secret Service) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் இந்த நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு ஏற்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மார்-ஏ-லாகோ எஸ்டேட்டின் மேற்குப் பகுதியில் உள்ள லேக் வொர்த் லகூனில் மிதக்கும் தளத்தில் இரண்டு 'அவெஞ்சர்' வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இவை தவிர, அதிபரின் விமானமான 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' நிறுத்தப்படும் இடத்திற்கு அருகில், சர்வதேச விமான நிலையத்தின் தெற்குப் பகுதியிலும் மற்றொரு ஏவுகணை அமைப்பு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த அவெஞ்சர் ஏவுகணை அமைப்புகள், ஹம்வீ (Humvee) ராணுவ வாகனங்களில் பொருத்தப்பட்ட குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்புகளாகும். இவை விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் பிற வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை குறைந்த உயரத்தில் பறக்கும் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் இறுதி பாதுகாப்பு அரணாகச் செயல்படும் என்று வான்வெளி நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இது குறித்து வட அமெரிக்க வான் பாதுகாப்பு கட்டளை மையம் (NORAD) மற்றும் அமெரிக்க வடக்கு கட்டளை மையம் (USNORTHCOM) வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்க ரகசிய சேவையின் கோரிக்கையை ஏற்று, மார்-ஏ-லாகோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தரைவழி வான் பாதுகாப்பு அமைப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக, இது தொடர்பான நுணுக்கமான தகவல்களை வெளியிட முடியாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்-ஏ-லாகோ வான்வெளியில் கடந்த ஆண்டில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக NORAD தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 24 அன்று, தடை செய்யப்பட்ட வான்வெளிக்குள் நுழைந்த விமானம் ஒன்றை எஃப்-16 போர் விமானம் மூலம் இடைமறித்து வெளியேற்றிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுக்கு எதிராக புதிய ராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிடுவதாகக் கூறப்படும் தகவல்கள் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
இது குறித்து அமெரிக்க செனட்டர் கிறிஸ் மர்பி கூறுகையில், "எங்களில் சிலருக்கு போர் திட்டம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. விவரங்களை என்னால் வெளிப்படுத்த முடியாது, ஆனால் அந்தத் திட்டம் மிகவும் அபாயகரமானது. இது எந்த நோக்கத்தையும் அடையப்போவதில்லை, மாறாக புதிய மோதல் சுழற்சிக்கே வழிவகுக்கும்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், நவம்பர் 3-ம் தேதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு, குறுகிய கால தீவிர ராணுவ நடவடிக்கைக்குத் தயாராக இருக்குமாறு வளைகுடா நாடுகளிடம் ட்ரம்ப் நிர்வாகம் கேட்டுக்கொண்டதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இதனுடன், அமெரிக்க ராணுவம் 'ஃபோர்ட்ரெஸ்' (FORTRESS) என்ற புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதன்படி, மின்சாரம் மற்றும் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டாலும், அமெரிக்க ராணுவ தளங்கள் 90 நாட்களுக்குத் தடையின்றி இயங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
