அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மார்-ஏ-லாகோ இல்லம் மற்றும் அருகிலுள்ள டொனால்ட் ஜே. டிரம்ப் சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்புக்காக, ஏஎன்/டிடபிள்யூக்யூ-1 அவெஞ்சர் (AN/TWQ-1 Avenger) ரக வான் பாதுகாப்பு அமைப்புகளை அமெரிக்க ராணுவம் நிறுவியுள்ளது. ஸ்டிங்கர் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கண்காணிக்கும் சென்சார்கள் கொண்ட இந்த தரைவழி பாதுகாப்பு அமைப்புகள், சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு நிறுவப்பட்டன. அமெரிக்க ரகசிய சேவைப் பிரிவின் (Secret Service) கோரிக்கையை ஏற்று, நோராட் (NORAD) மற்றும் அமெரிக்க வடக்குக் கட்டளை மையம் ஆகியவற்றின் அனுமதியுடன் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ட்ரோன் ஊடுருவல்கள் குறித்த அச்சம் மற்றும் அச்சுறுத்தல் சூழல் அதிகரித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஏற்கனவே அமலில் உள்ள தற்காலிக விமானக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்துவதே இந்த அவெஞ்சர் அமைப்புகளின் முக்கிய நோக்கமாகும். கடந்த 2025 அக்டோபர் முதல், இப்பகுதியில் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் 160-க்கும் மேற்பட்ட முறை கட்டுப்பாடுகள் மீறப்பட்டுள்ளன.
இதனால் நோராட் போர் விமானங்கள் அடிக்கடி இடைமறிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியிருந்தது. அதிபருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், பாதுகாப்பு முறைகளை மேம்படுத்த நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதாக ரகசிய சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது. சமீபத்திய மாதங்களில் அதிபரின் பாதுகாப்பிற்காக அவெஞ்சர் அமைப்புகள் பயன்படுத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

