இந்தியத் திரையுலகில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள 'ராமாயணா' திரைப்படத்தில் சீதையாக அவர் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இசையமைத்துள்ள இப்படத்தில், ரன்பீர் கபூர் ராமராகவும், யஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாகம் வரும் நவம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையொட்டி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற சிறப்புத் திரையிடல் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அங்கு சர்வதேச ஊடகங்களிடம் பேசிய சாய் பல்லவி, ராமாயணம் குறித்த தனது பார்வையைப் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர், "ராவணன் முழுக்க முழுக்க கெட்டவன் அல்ல.
நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ராவணன் இருக்கிறான். நமக்குள் இருக்கும் நல்லது, கெட்டது ஆகியவற்றை நாம் அடையாளம் கண்டுகொண்டு, காலப்போக்கில் நம்மை நாமே மாற்றிக்கொள்வது முக்கியம்" என்று குறிப்பிட்டார். சாய் பல்லவியின் இந்தக் கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமாயணத்தில் சீதையைக் கடத்திச் சென்ற ராவணனை, சீதையாக நடிக்கும் ஒரு நடிகையே நியாயப்படுத்துவது ஏற்புடையதல்ல என்று ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், ராவணனின் சிவபக்தி, அறிவாற்றல் மற்றும் வேதப் புலமை போன்ற நற்குணங்களைச் சுட்டிக்காட்டும் ஆதரவாளர்கள், சாய் பல்லவியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஒருவரிடம் நற்குணங்கள் இருந்தாலும், அவர் செய்யும் தவறுகளை நியாயப்படுத்த முடியாது என்றும், நம்மிடம் இருக்கும் தீய குணங்களை அடையாளம் கண்டு அவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற கோணத்திலேயே சாய் பல்லவி பேசியுள்ளார் என்றும் அவரது ஆதரவாளர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

