ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுவதாக தமிழக அரசு தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். நஃபெட் (NAFED) மூலம் கொள்முதல் செய்யப்பட்ட 450 டன் வெங்காயம் தரம் இல்லை எனக் கூறி தமிழக அரசு அதனைப் பெறவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, தாங்கள் வெங்காயத்தை அனுப்பவில்லை என்று நஃபெட் நிறுவனம் தெரிவித்துள்ளதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, கொள்முதல் செய்யப்பட்ட 450 டன் வெங்காயம் எங்கே போனது என்று கேள்வி எழுப்பியுள்ளார். வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயம் லாரிகளிலேயே மூன்று நாட்களாக இறக்கப்படாமல் கொருக்குப்பேட்டை கிடங்கில் வீணாவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.




