தெலங்கானா மாநிலத்தில் முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் தத்தெடுக்கப்பட்ட குழந்தையை, வளர்ப்பு பெற்றோரிடமிருந்து பிரித்த அதிகாரிகளின் செயலுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
குழந்தை இல்லாத தம்பதியினர், தாயை இழந்த ஐந்து நாள் பச்சிளம் குழந்தையைத் தத்தெடுத்து கடந்த மூன்று ஆண்டுகளாக வளர்த்து வந்தனர். சட்டப்பூர்வ தத்தெடுப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி, குழந்தை நலக்குழு அதிகாரிகள் அக்குழந்தையைப் பிரித்து பராமரிப்பு மையத்திற்கு மாற்றினர்.
பராமரிப்பு மையத்தில் குழந்தையைப் பார்க்கச் சென்றபோது, மூன்று வயது சிறுவன் தனது வளர்ப்பு பெற்றோரை இறுகக் கட்டிக்கொண்டு கதறி அழுத காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த விவகாரத்தை விசாரித்த தெலங்கானா உயர்நீதிமன்றம், தத்தெடுப்பு நடைமுறைகளில் குறைபாடுகள் இருந்தாலும், குழந்தையை வளர்த்த பெற்றோரிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.


