தீபாவளி பண்டிகை நாளான நவம்பர் 8-ம் தேதி தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையத்தின் விஞ்ஞானி வி. ஆர்.துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் தாழ்குனியில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று (நவ.4) நீலகிரி, கோவை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தென் தமிழகத்தின் பிற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளை (நவ.5) தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகம், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். நவம்பர் 6-ம் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 7-ம் தேதி மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். தீபாவளி நாளான நவம்பர் 8-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

