தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகளாக துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் இருப்பது கல்வித் தரத்தையும் நிர்வாகத்தையும் நேரடியாகப் பாதிக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. இந்த அசாதாரணமான சூழலைச் சரிசெய்ய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது குறித்து விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியத்தை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்தபோது, நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் இந்த கருத்துகளைத் தெரிவித்தார். வழக்கை விசாரித்தபோது, பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரோ அல்லது சிண்டிகேட் குழுவோ இல்லாததால், ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழுவே நிர்வாகத்தைக் கவனித்து வருவதாகவும், இதனால் நிர்வாக ரீதியான சிக்கல்களைத் தீர்ப்பதில் பதிவாளர் சிரமப்படுவதாகவும் மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன் வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி தனது உத்தரவில், “ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு என்பது தற்காலிக ஏற்பாடு மட்டுமே. இக்குழுவால் பல்கலைக்கழகங்களையும் அதன் கீழ் வரும் கல்லூரிகளையும் முழுமையாக நிர்வகிப்பது இயலாத காரியம். கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக இத்தகைய சூழல் நீடிப்பது கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டை நேரடியாகப் பாதித்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
மேலும், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் மற்றும் சிண்டிகேட் குழு இல்லாத நிலையைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, “இந்த அசாதாரணமான சூழலைச் சரிசெய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அது தமிழகத்தின் உயர்கல்வியைப் பாதிக்கும்” என்று எச்சரித்தார்.
இந்த விவகாரத்தில் இயல்பு நிலையை மீட்டெடுக்க அரசு மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறு தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் நிதித்துறைச் செயலாளரைத் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராகச் சேர்த்த நீதிபதி, அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளரை ஓய்வூதிய விநியோகம் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.



