தமிழகத்தில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் புத்தாடை, பட்டாசு மற்றும் இனிப்புகளை வாங்குவதற்காக மக்கள் கடைவீதிகளில் பெருமளவில் திரண்டனர். சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாநகரங்களில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைவீதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.
தீபாவளியை முன்னிட்டு, துணிக்கடைகளில் பல்வேறு ரகங்களிலான புத்தாடைகள் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. கடந்த வார இறுதி நாட்களிலேயே பலரும் புத்தாடைகளையும் பட்டாசுகளையும் வாங்கிச் சென்ற நிலையில், பண்டிகைக்கு முந்தைய நாளான நேற்றும் காலை முதலே கடைகளில் கூட்டம் அலைமோதியது. சொந்த ஊர்களுக்குப் புறப்படுவதற்கு முன்பாக கடைசி நேரத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள மக்கள் ஆர்வம் காட்டினர்.
சென்னையில் தியாகராய நகர் ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பிராட்வே, குரோம்பேட்டை மற்றும் பள்ளிக்கரணை உள்ளிட்ட பிரதான வர்த்தகப் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இதேபோல், மதுரையின் விளக்குத்தூண் மற்றும் தெற்குமாசி வீதி, கோவையின் டவுன்ஹால், காந்திபுரம், கிராஸ்கட் சாலை மற்றும் ஒப்பணக்கார வீதி, திருச்சியின் என்எஸ்பி சாலை மற்றும் பெரியக்கடை வீதி, திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இனிப்புக் கடைகளிலும் விதவிதமான இனிப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. உணவகங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், பலர் காத்திருந்து உணவருந்தினர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.



