சவூதி அரேபியாவின் தம்மாம், தஹ்ரான் மற்றும் அப்கைக் ஆகிய நகரங்களில் அவசரக்கால பாதுகாப்பு எச்சரிக்கையை அந்நாட்டின் சிவில் பாதுகாப்புத் துறை ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ளது. ஏமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்கள் மற்றும் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹூதி கிளர்ச்சியாளர்கள் தம்மாம் விமான நிலையத்தை இலக்கு வைத்ததாகக் கூறியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சவூதியின் முன்கூட்டியே எச்சரிக்கும் ரேடார் அமைப்பு மற்றும் இராணுவ போக்குவரத்து விமானம் மீது தாக்குதல் நடத்தியதாக ஹூதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில், ஏமன் வெளியுறவுத்துறை அமைச்சர் அஃப்ரா அல்-ஜூபா, லெபனான் அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார். ஹூதி போராளிகளுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு இராணுவ ஆதரவு வழங்குவதைத் தடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். லெபனான் தனது தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவ முடிவுகளில் முழுமையான கட்டுப்பாட்டை வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


