சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை கேரள அரசு அறிவித்துள்ளது. இதற்காக காவல்துறை நலன் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காவலர்களுக்கான தினசரி உணவுப்படி ரூ.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன், பயணப்படி ரூ.600 ஆக இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலக்கல்லில் 700-க்கும் மேற்பட்ட காவலர்கள் தங்கும் வகையில் புதிய தங்குமிடம் கட்டப்பட்டுள்ளது. சன்னிதானம், பம்பை மற்றும் நிலக்கல் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பை கண்காணிக்க ஏடிஜிபி பி.விஜயன் நோடல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பக்தர்களின் வருகையை சீரமைக்க நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. நிலக்கல்லில் ரூ.3 கோடி செலவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்ட நெரிசலில் குழந்தைகள் பிரிந்து செல்வதைத் தவிர்க்க மணிக்கட்டில் அணியும் அடையாளக் குறிச்சீட்டு முறை அமல்படுத்தப்படுகிறது. பாரம்பரிய பாதைகள் மற்றும் முக்கிய இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு, ரோந்துப் பணிகள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்படும். தற்காலிக காவல் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.
நவம்பர் 15 முதல் 2027 ஜனவரி 20 வரை பூங்காவனம் பகுதியில் மது, போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அமல்படுத்த பம்பையில் கலால் துறை சார்பில் தற்காலிக அலுவலகங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் வனத்துறையுடன் இணைந்து கலால் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


