பெங்களூரு ராஜாஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான இந்துசேகர், கொலை செய்யப்பட்ட சங்கர் மற்றும் நளினி தம்பதியின் 11 வயது சிறுவனை, அவர்களது உடல்கள் வைக்கப்பட்டிருந்த அதே காரில் பல நூறு கிலோமீட்டர் தூரம் அழைத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அந்தச் சிறுவன் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான். சம்பவத்தன்று இரவு பெற்றோருடன் இந்துசேகரின் வீட்டிற்குச் சென்றதாகவும், இரவு உணவை முடித்துவிட்டு உறங்கச் சென்றதாகவும் சிறுவன் தெரிவித்தான். மறுநாள் சனிக்கிழமை காலை எழுந்தபோது தனது தந்தையைக் காணவில்லை என்று அவன் கூறியுள்ளான்.
தனது தாயுடன் அங்கிருந்து கிளம்பத் தயாரானபோது, வீட்டில் இருந்த பெண் ஒருவர் தன்னை ஒரு அறைக்குள் இழுத்துச் சென்று பூட்டிவிட்டதாக சிறுவன் விவரித்தான். பின்னர் தனது தாய், 'என்னை விட்டுவிடுங்கள்' என்று அலறும் சத்தம் கேட்டதாகவும், அதன் பிறகு அமைதி நிலவியதாகவும், அறைக்குள் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்ததாகவும் அவன் காவல்துறையிடம் தெரிவித்தான்.
நளினியைக் கொலை செய்த பிறகு, அந்த அறைக்கதவைத் திறந்து சிறுவனை அழைத்துச் சென்ற இந்துசேகர், காரில் ஏற்றியுள்ளான். காரின் இருக்கைக்கு அடியிலும் பம்பருக்கு அடியிலும் பிளாஸ்டிக் மற்றும் சாக்குப்பைகளில் உடல்களை மறைத்து வைத்திருந்தான். காரில் இருந்த மூட்டைகள் குறித்து சிறுவன் கேட்டபோது, அவை வீட்டு உபயோகக் கழிவுகள் என்று கூறி அவனை மிரட்டியுள்ளான்.
தனது பெற்றோரின் உடல்கள் தான் அந்தப் பைகளில் இருந்தன என்பது தெரியாமல், அந்தச் சிறுவன் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடியிலேயே உடல்களை வைத்துக்கொண்டு குக் சுப்பிரமணியா, தர்மஸ்தலா மற்றும் சிருங்கேரி உள்ளிட்ட பல இடங்களுக்கு இந்துசேகர் காரை ஓட்டிச் சென்றுள்ளான். கொலைகளைச் செய்த பிறகு, பாதிக்கப்பட்டவர்களின் தங்க நகைகளை இந்துசேகர் பறித்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
தனது மனைவி சுனிதா, மாமியார் ரூபாவதி மற்றும் நளினி ஆகியோரை மூச்சுத்திணறச் செய்து கொலை செய்த பிறகு, அவர்களது தங்கச் சங்கிலிகள், வளையல்கள் மற்றும் கம்மல்களைக் கழற்றியுள்ளான். ரத்தக்கறையுடன் இருந்த நகைகளைச் சுத்தம் செய்துவிட்டு, அவற்றை விற்பனை செய்துள்ளான். பெங்களூருவில் உள்ள சில நகைக்கடைகளில் நகைகளை விற்று, அந்தப் பணத்தைத் தனது செலவுகளுக்குப் பயன்படுத்தியதாக அவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
மீதமுள்ள நகைகளைத் தனது பேண்ட் பையில் வைத்திருந்தான். உடல்களைச் சிக்பள்ளாப்பூர் மற்றும் தமிழகத்தின் சேலம் போன்ற வனப்பகுதிகளை நோக்கி காரில் கொண்டு சென்றபோது, டீசல் தீர்ந்துபோனது. கையில் பணம் இல்லாததால், பையில் வைத்திருந்த நகைகளை அடகு வைத்து டீசல் நிரப்பியுள்ளான்.
இது தொடர்பாக நகைக்கடை உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டுள்ள ராஜாஜிநகர் காவல்துறையினர், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்கும் பணியைத் தொடங்கியுள்ளனர்.





