2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தோல்வியடையும் என்று காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே கணித்துள்ளார். கொச்சியில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் பேசிய அவர், மக்கள் ஆட்சி மாற்றத்திற்குத் தயாராக வேண்டும் என்றும், இந்த மாற்றம் தேர்தல் ஜனநாயக முறைப்படியே நிகழ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கட்சியின் 'ஜந்தர் மந்தர் அட் கொச்சி' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சுதந்திரமான தேர்தல் முறையை அமல்படுத்த வேண்டும் என்றும், தலைமைத் தேர்தல் ஆணையர் கியான்ேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தற்போதைய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும் வகையிலும், ஜனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் பயன்படுத்தப்படுவதாக திப்கே குற்றம் சாட்டினார்.
மேலும், இளைஞர்கள் மீதான அரசின் அணுகுமுறையை விமர்சித்த திப்கே, தேசியக் கொடியை ஏந்துவதற்கான தனது உரிமையை நியாயப்படுத்தினார். மகாத்மா காந்தி, பி.ஆர். அம்பேத்கர் மற்றும் ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் நிலைநாட்டிய ஜனநாயக விழுமியங்களைக் காப்பதில் அரசு தவறிவிட்டதாகவும், தேசிய நலன்களைப் பாதிக்கும் வகையில் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.





