உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லுக், டீம்ஸ் மற்றும் கோபைலட் சேவைகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் 74 நாடுகளில் லட்சக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டனர். அமெரிக்காவில் தொடங்கிய இந்தச் சிக்கல், மைக்ரோசாப்ட் 365 மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆன்லைன் மெயில் சேவைகளையும் முடக்கியது. சுமார் 24 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சேவைகள் படிப்படியாக சீரமைக்கப்பட்டன.
இந்தச் சம்பவம் சைபர் தாக்குதலால் ஏற்படவில்லை என்றும், தொழில்நுட்பக் கோளாறே காரணம் என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிப்பு கோரியுள்ள அந்நிறுவனம், இது குறித்த விரிவான அறிக்கை முழுமையான ஆய்வுக்குப் பிறகு வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.
ஆண்டர்சன் எகனாமிக் குரூப் மதிப்பீட்டின்படி, இந்த முடக்கத்தால் சுமார் 7 பில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ.66,000 கோடி அளவுக்கு உற்பத்தித் திறன் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், தொழில்நுட்ப உதவி மையம் என்ற பெயரில் வரும் மோசடி மின்னஞ்சல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பயனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



