தவறு செய்த தவெக எம்எல்ஏ மற்றும் துணை சபாநாயகரை பதவியில் இருந்து நீக்கக்கூட துணிவில்லாத முதல்வர் விஜய், தன்னை எப்படி தூய சக்தி என்று கூறிக்கொள்ள முடியும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பறிக்கும் காங்கிரஸ் கட்சியின் தயவில்தான் தவெக ஆட்சி நடைபெறுவதாக குற்றம் சாட்டினார்.
சிறுமி காணாமல் போன விவகாரத்திலும், புகார் அளிக்க வந்தவரை துணை சபாநாயகர் தாக்கிய சம்பவத்திலும் முதல்வர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சீமான் சுட்டிக்காட்டினார். எம்எல்ஏ அருள் விக்னேஷை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் தயங்குவது ஏன் என்று வினவிய அவர், தோல்விக்கு பயந்து மக்கள் தீர்ப்பை எதிர்கொள்ள அஞ்சுவது ஒரு தலைவருக்கு அழகல்ல என்றார்.
வெற்றி பெற்றால் மட்டுமே களத்தில் இருப்போம் என்பது நியாயமற்றது என்றும், தோல்வி அடைந்தாலும் களத்தில் நிற்பவனே உண்மையான வீரன் என்றும் அவர் குறிப்பிட்டார். பெரும்பான்மையை விட உண்மையும் நேர்மையுமே முக்கியம் என்று வலியுறுத்திய சீமான், தவெகவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.





