1977-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் வாயேஜர் 1 விண்கலம், மனித வரலாற்றில் பூமியிலிருந்து மிக நீண்ட தூரம் பயணித்த விண்கலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. சூரிய குடும்பத்தைக் கடந்து விண்மீன்களுக்கு இடையிலான விண்வெளியில் (interstellar space) பயணித்து வரும் இந்த விண்கலம், தற்போது ஒரு முக்கிய மைல்கல்லை எட்ட உள்ளது. அதாவது, ஒளி ஒரு நாளில் கடக்கும் தூரமான 'ஒரு ஒளிநாள்' (light-day) தொலைவை இது அடையவுள்ளது.
ஒரு ஒளிநாள் என்பது சுமார் 16 பில்லியன் மைல்கள் (26 பில்லியன் கி. மீ) ஆகும். மணிக்கு சுமார் 38,000 மைல் (61,000 கி.மீ) வேகத்தில் பயணிக்கும் இந்த விண்கலம், புதன்கிழமை காலை 5:16 மணிக்கு (ET) இந்தத் தொலைவை எட்டும் என்று நாசா அறிவித்துள்ளது. இது மனிதனால் உருவாக்கப்பட்ட விண்கலங்களில் பூமியிலிருந்து மிக அதிக தொலைவில் உள்ள விண்கலமாகும். கலிபோர்னியாவின் கால்டெக் (Caltech) விண்வெளி கதிர்வீச்சு ஆய்வகத்தின் மூத்த ஆராய்ச்சியாளரும், 1973 முதல் வாயேஜர் திட்டத்தில் பணியாற்றி வருபவருமான வானியற்பியல் நிபுணர் ஆலன் கம்மிங்ஸ் இது குறித்து கூறுகையில், 'இது ஒரு பொறியியல் மைல்கல்.
வாயேஜர் 1-ன் நீண்டகால செயல்பாட்டையும், இவ்வளவு தொலைவில் இருந்தும் அதனுடன் தொடர்புகொள்ளும் நமது தொழில்நுட்பத் திறனையும் இது காட்டுகிறது' என்று தெரிவித்தார். வாயேஜர் 1 மற்றும் அதன் இரட்டை விண்கலமான வாயேஜர் 2 ஆகிய இரண்டும் 49 ஆண்டுகளுக்கு முன்பு ஏவப்பட்டன. செப்டம்பர் 5, 1977 அன்று புளோரிடாவின் கேப் கனாவெரலில் இருந்து டைட்டன் IIIE-சென்டார் ராக்கெட் மூலம் வாயேஜர் 1 விண்ணில் செலுத்தப்பட்டது.
வியாழன் மற்றும் சனி கிரகங்கள் குறித்த பல புதிய தகவல்களை வாயேஜர் 1 வழங்கியது. வியாழனைச் சுற்றி மெல்லிய வளையம் இருப்பதையும், தீப் (Thebe), மெடிஸ் (Metis) ஆகிய புதிய நிலவுகளையும் இது கண்டறிந்தது. மேலும், சனிக்கிரகத்தைச் சுற்றி ஐந்து புதிய நிலவுகளையும், ஜி-வளையம் (G-ring) எனப்படும் வளையத்தையும் இது கண்டுபிடித்தது.
வாயேஜர் 2 விண்கலம் 2035-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு ஒளிநாள் தொலைவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2012-ம் ஆண்டு சூரியனின் காந்தப்புலங்கள் மற்றும் துகள்களால் ஆன ஹெலியோஸ்பியர் எல்லையைக் கடந்து வாயேஜர் 1 விண்மீன்களுக்கு இடையிலான விண்வெளிக்குள் நுழைந்தது. வாயேஜர் 2 விண்கலம் 2018-ல் அந்த எல்லையைக் கடந்தது.
விண்வெளி ஆய்வில் வாயேஜர் 1-ன் பங்களிப்பு குறித்து கம்மிங்ஸ் குறிப்பிடுகையில், 'குறைந்த ஆற்றல் கொண்ட விண்மீன் கதிர்வீச்சுகளை (galactic cosmic rays) முதன்முதலில் பதிவு செய்த விண்கலம் இதுதான். ஹெலியோஸ்பியருக்குள் சூரியக் காற்றின் அழுத்தத்தால் இந்த ஆற்றல்மிக்க துகள்களைக் கண்டறிய முடியாது. இது விண்வெளி இயற்பியலில் ஒரு முக்கிய சாதனையாகும்' என்று கூறினார்.
வாயேஜர் விண்கலங்களில் பூமியின் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் 'கோல்டன் ரெக்கார்ட்' (Golden Record) எனப்படும் தங்க முலாம் பூசப்பட்ட செப்புத் தட்டு பொருத்தப்பட்டுள்ளது. இதில் இசை, பல்வேறு மொழிகளில் வாழ்த்துகள் மற்றும் பூமியின் இருப்பிடத்தைக் காட்டும் வரைபடங்கள் உள்ளன. வேற்றுக்கிரகவாசிகள் பூமியைக் கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற அச்சம் குறித்து கம்மிங்ஸ் கூறுகையில், 'அத்தகைய கவலைகள் அவ்வப்போது எழுப்பப்படுகின்றன, ஆனால் நான் அதை ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை.
வேற்றுக்கிரகவாசிகள் இதைத் தேடிக் கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று' என்று தெரிவித்தார்.





