கடலூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது போபாலில் உள்ள ஆய்வகப் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி முதல் கடலூர்-குறிஞ்சிப்பாடி பகுதியில் 34,527 கோழிகள் உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார். பாதிப்பு இப்பகுதிக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட 15 பண்ணைகளில் உள்ள கோழிகளை அழிக்கும் பணியில் ஒன்பது சிறப்பு குழுக்கள் ஈடுபட்டுள்ளன. மேலும், அப்பகுதிகளைச் சுத்தப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழுக்கள் இப்பகுதிகளைக் கண்காணித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பண்ணைகளில் அடுத்த 90 நாட்களுக்குப் புதிய கோழிகளை வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பண்ணை தொழிலாளர்களுக்குத் தேவையான டாமிபுளூ (Tamiflu) மருந்துகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மேலும், அறிகுறிகளைக் கண்காணிக்க மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



