பிரேசிலின் மரன்ஹாவோ மாநிலம், அரரிபோயா பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வந்த சுமார் 20 அவா பழங்குடியின மக்கள், கடந்த நவம்பர் 16-ம் தேதி திடீரென காட்டிலிருந்து வெளியேறி குவாஜஜாரா கிராமத்தை அடைந்துள்ளனர். அங்குள்ள அரசு கண்காணிப்புக் குழுவினரிடம் அவர்கள் உணவுப் பொருட்களைக் கேட்டுப் பெற்றுச் சென்ற காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காடுகளையே வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள், உணவுக்காக வெளியே வரும் நிலைக்குத் தள்ளப்பட்டது சர்வதேச அளவில் கவலையை உருவாக்கியுள்ளது.
பழங்குடியின மக்களின் வாழ்விடங்களில் மனிதர்களின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதே இதற்கு முக்கியக் காரணம் என உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. சர்வைவல் இன்டர்நேஷனல் அமைப்பின் இயக்குநர் கரோலின் பியர்ஸ் கூறுகையில், அவா மக்கள் ஊடுருவல்காரர்களால் சூழப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்களின் காடுகள் சுருங்கி வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து பிரேசிலின் பழங்குடியின விவகாரங்களுக்கான அரசு அமைப்பான ஃபூனாய் (FUNAI) தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
அமேசான் காடுகளைப் பாதுகாக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில், அங்குள்ள பழங்குடியின மக்கள் தங்களது வாழ்விடங்களை இழந்து வருவது பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதால், வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரித்தல் போன்ற அவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.



