அமெரிக்காவில் வசிக்கும் குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்யத் திட்டமிட்ட வழக்கில், இந்தியரான நிகில் குப்தாவிற்கு நியூயார்க் மாவட்ட நீதிமன்றம் 19 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கூலிப்படை மூலம் கொலை செய்யத் திட்டமிட்டது, அதற்கான சதி மற்றும் பணமோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிபதி விக்டர் மாரெரோ இந்தத் தண்டனையை வழங்கினார். மொத்தம் 235 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு இந்திய அரசு அதிகாரி ஒருவரின் தூண்டுதலின் பேரில், அமெரிக்கக் குடிமகனும், பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான பன்னுனை கொலை செய்ய நிகில் குப்தா சதி செய்ததாக அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இதற்காக, பன்னுன் குறித்த தனிப்பட்ட விவரங்களை வழங்கியதோடு, கொலையைச் செய்ய முன்வந்த அமெரிக்க ரகசியக் காவல்துறை அதிகாரியிடம் முன்தொகையையும் குப்தா வழங்கியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அரசு தரப்பில் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை கோரப்பட்ட நிலையில், நிகில் குப்தா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைக் கருத்தில் கொண்டு, அவரது தரப்பு வழக்கறிஞர்கள் 12 ஆண்டுகள் தண்டனை வழங்கக் கோரியிருந்தனர். சிறைத்தண்டனை முடிந்த பிறகு, நிகில் குப்தா அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படுவார் என நீதிபதி குறிப்பிட்டார்.


