தங்கத்தின் விலை சரிவுக்கு இந்திய மக்களின் ஒத்துழைப்பே காரணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். லக்னோவில் நடைபெற்ற 5-வது தேசிய திறன் பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், தங்கத்தை வாங்குவதைத் தவிர்க்குமாறு கடந்த மே மாதம் தான் விடுத்த வேண்டுகோளைப் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார். தனது ஆலோசனையைப் பின்பற்றியதன் மூலம் பலரும் பணத்தைச் சேமிக்க முடிந்தது என்று தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.
அரசு தரவுகளின்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் தங்க இறக்குமதி சுமார் 40 சதவீதம் குறைந்து 24.78 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த ஆண்டு இது 41.24 பில்லியன் டாலராக இருந்தது. மேலும், ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் தங்கத்திற்கான தேவை 29 சதவீதம் சரிந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்புக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க, தங்கத்தை வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் மோடி மே மாதம் வேண்டுகோள் விடுத்தார். மேலும், தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அரசு உயர்த்தியது. இதன் விளைவாக, மே 9-ம் தேதி ஒரு கிராம் 15,250 ரூபாயாக இருந்த தங்கத்தின் விலை, 12,523 ரூபாயாகக் குறைந்துள்ளது.



