ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில், தமிழக அரசு செயல்படுத்தி வரும் ஏஐ கேமரா தொழில்நுட்பத்தை கேரளாவிலும் இரண்டு மாதங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் ஜி.கே.முத்துகுமார் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கேரள வனப்பகுதிகளில் ரயில் தண்டவாளங்களைக் கடக்கும் யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, தண்டவாளங்களுக்கு அடியில் சுரங்கப்பாதைகள் அமைக்க விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கேரள அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மதுக்கரை - கஞ்சிக்கோடு இடையே தடுப்பு அமைப்பதற்கான டெண்டர் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டப் பணிகள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய ரயில்வே துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. தமிழகத்தில் ஏஐ கேமராக்கள் மூலம் யானைகள் உயிரிழப்பு தடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதே முறையை கேரளாவிலும் பின்பற்ற வலியுறுத்தினர்.



