அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சிகாகோ பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பாகிஸ்தான் மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு அளிக்கும் ஆதரவை நிறுத்தினால் மட்டுமே அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்தியாவின் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமற்றது என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, பயங்கரவாத ஆதரவு நிறுத்தப்படும் பட்சத்தில் மட்டுமே பேச்சுவார்த்தைக்கான சூழல் உருவாகும் என்றார். அண்டை நாடுகளுடனான விவகாரங்களில் பாகிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியா வெறும் பார்வையாளராக இருப்பது அதிர்ச்சியளிப்பதாக அவர் விமர்சித்தார்.
உலக அரங்கில் இந்தியா இரண்டாம் நிலை பங்கேற்பாளராக மாறிவிட்டதாகக் கவலை தெரிவித்த ராகுல் காந்தி, இந்தியாவின் நலன்களே வெளியுறவுக் கொள்கையை வழிநடத்த வேண்டும் என்றார். இந்தியாவின் வரலாறு மற்றும் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, உலகளாவிய விவாதங்களில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


