ஹைதராபாத்தில் உள்ள மெட்டா அலுவலகத்திற்குள் வெள்ளிக்கிழமை நுழைந்த தெலுங்கானா இளைஞர் காங்கிரஸ் கட்சியினர், மாநிலத் தலைவர் ஜக்கிடி சிவச்சரண ரெட்டி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர் காங்கிரஸ் தேசியத் தலைவர் உதய்பானு சிப் மற்றும் தேசியப் பொறுப்பாளர் மணீஷ் சர்மா ஆகியோரின் சமூக ஊடகக் கணக்குகள் மீது மெட்டா நிறுவனம் விதித்துள்ள கட்டுப்பாடுகளைக் கண்டித்து, அலுவலகத்திற்குள் இருந்த பூந்தொட்டிகளை அடித்து நொறுக்கி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். தங்கள் கணக்குகள் மற்றும் பதிவுகள் மீதான தடைகளை ஏழு நாட்களுக்குள் நீக்காவிட்டால், நீதிமன்றம் மற்றும் அலுவலகங்களில் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என மெட்டா நிறுவனத்திற்கு அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் மும்பை பி.கே.சி பகுதியில் உள்ள மெட்டா அலுவலகத்திற்கு வெளியேயும் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் உருவ பொம்மையை எரித்தனர்.
இந்தச் சம்பவத்திற்கு பாஜக மற்றும் பி.ஆர்.எஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சியினரை 'குண்டர்களின் கட்சி' என பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி விமர்சித்துள்ளார். இத்தகைய செயல்கள் ஹைதராபாத்தின் வணிக நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என பி.ஆர்.எஸ் தலைவர் கே.டி. ராமாராவ் குறிப்பிட்டார். இதனிடையே, மெட்டா நிறுவனம் அரசியலில் தலையிடாமல் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.



