கனடா தனது புதிய குடியேற்றத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 1,50,000 சர்வதேச மாணவர்களை வரவேற்கும் இலக்கை 2029-ஆம் ஆண்டு வரை நீட்டித்துள்ளது. இதனுடன், தற்காலிக குடியிருப்பாளர்கள் வருகைக்கான உச்சவரம்பை ஆண்டுக்கு 3,70,000 ஆகவும், இதில் 2,20,000 பணியாளர்கள் அடங்குவர் என்றும் அரசு நிர்ணயித்துள்ளது. நிரந்தரக் குடியிருப்பாளர்கள் சேர்க்கை ஆண்டுக்கு 3,80,000 என்ற அளவில் தொடரும். வீட்டுவசதி மற்றும் பொதுச் சேவைகளைச் சீரமைக்கும் நோக்கில், குடியேற்ற அளவுகளைக் கணிக்கக்கூடிய வகையில் வைத்திருக்க அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
அரசு நிர்ணயித்த இலக்குகளை விட, சமீபத்திய தரவுகளின்படி உண்மையான வருகை குறைவாகவே உள்ளது. 2025-ஆம் ஆண்டில் 3,05,900 மாணவர்கள் வருவார்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 1,15,180 மாணவர்கள் மட்டுமே வந்துள்ளனர். இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தற்காலிக குடியிருப்பாளர்களை நிரந்தரக் குடியிருப்பாளர்களாக மாற்றுவதையும், தொழிலாளர் சந்தையின் தேவைக்கேற்ப குடியேற்றத் திட்டங்களை அமைப்பதையும் அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நீட்டிப்பை கனடிய சர்வதேச கல்வி பணியகம் மற்றும் கனடிய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி அமைப்புகள் வரவேற்றுள்ளன. நீண்டகால மற்றும் நிலையான இலக்குகள், கல்வி நிறுவனங்கள் தங்களின் மாணவர் சேர்க்கை உத்திகளைத் திட்டமிடவும், சர்வதேச கல்வித் துறையில் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் உதவும் என்று அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.



