வாடிக்கையாளரின் அடமான சொத்து ஆவணத்தை திருப்பித் தராத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ), நாளொன்றுக்கு ரூ. 5,000 அபராதம் விதித்து அலிகார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குல்வீர் சிங் சவுகான் (70) என்பவர் 1997-ம் ஆண்டு பெற்ற வீட்டுக் கடனை 2019-ம் ஆண்டு மே மாதம் முழுமையாகச் செலுத்தி முடித்தார். ஆனால், அந்த ஆவணத்தைத் தேடியபோது கிடைக்கவில்லை என வங்கி நிர்வாகம் அலட்சியமாகச் செயல்பட்டது.
வங்கியின் இந்தச் செயல் சேவை குறைபாடு என ஆணையத்தின் தலைவர் ஹஸ்னைன் குரேஷி மற்றும் உறுப்பினர் பூர்ணிமா சிங் ராஜ்புத் ஆகியோர் தீர்ப்பளித்தனர். இந்த ஆவணம் இல்லாததால், சொத்தை நிர்வகிக்கவோ, உரிமையை மாற்றவோ அல்லது புதிய கடன்களைப் பெறவோ முடியாமல் பாதிக்கப்பட்டதாக ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. கடன் அடைக்கப்பட்ட தேதியிலிருந்து கணக்கிடப்படும் அபராதத்துடன், வழக்குச் செலவுக்காக ரூ. 10,000 வழங்கவும் வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நிறைவேற்ற 45 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், தவறும் பட்சத்தில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


