மணிப்பூர் மாநிலம் சந்தேல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் கடந்த 48 மணி நேரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 180-க்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் அருந்திய மதுபானம் காக்சிங் மாவட்டத்தின் சுக்னு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உள்ளூரில் தயாரிக்கப்படும் மதுபானங்களை அருந்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாந்தி, தலைச்சுற்றல் அல்லது பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து முதல்வர் யும்னாம் கெம்சந்த் சிங் நலம் விசாரித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் அரசு வழங்கும் என உறுதியளித்த அவர், இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.



