இந்தியாவில் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட எச்பிவி (HPV) தடுப்பூசித் திட்டம், ஒன்பது மாதங்களில் ஒரு கோடி டோஸ்களைக் கடந்து மைல்கல்லை எட்டியுள்ளது. 14 வயதுடைய சிறுமிகளை இலக்காகக் கொண்ட இந்தத் திட்டத்தில், இதுவரை 87 சதவீதத்தினர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். அரசு சுகாதார மையங்கள் மூலம் இந்தத் தடுப்பூசி இலவசமாகவும், விருப்பத்தின் அடிப்படையிலும் வழங்கப்படுகிறது.
உத்தரப் பிரதேசம், குஜராத், பீகார் உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நூறு சதவீதம் எட்டியுள்ளன. இதில் உத்தரப் பிரதேசம் 29.33 லட்சம் டோஸ்களுடன் முதலிடத்தில் உள்ளது. அசாம், தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமான இலக்கை எட்டியுள்ள நிலையில், தமிழகத்தில் இந்தத் தடுப்பூசி செலுத்தும் பணி 70 சதவீதத்தை எட்டியுள்ளது.
பயனாளிகளைக் கண்காணிக்கவும், பதிவுகளை நிர்வகிக்கவும் 'யு-வின்' (U-WIN) என்ற டிஜிட்டல் தளம் பயன்படுத்தப்படுகிறது. கருப்பை வாய் புற்றுநோயை ஒழிப்பதற்கான உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய உத்திக்கு ஏற்ப, தடுப்பூசி செலுத்துதல், பரிசோதனை மற்றும் உரிய சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கி இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



