தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், வங்கிகளில் நகை அடமானம் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 11 ஆயிரத்து 465 ரூபாய்க்கும், ஒரு சவரன் 91 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்க கடன் பத்திர வட்டி உயர்வு மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கத்தின் சந்தை மதிப்பு குறையும்போது, அடமான நகையின் மதிப்புக்கும் நிலுவைக் கடன் தொகைக்கும் இடையிலான விகிதம் மாறுபடுகிறது. இதனால் சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை கூடுதல் தொகையைச் செலுத்தவோ அல்லது கடன் தொகையைக் குறைக்குமாறு கோரி நோட்டீஸ் அனுப்பி வருகின்றன. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலை எதிர்கொள்வது குறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்க் விளக்கம் அளித்துள்ளார். வங்கிகள் நோட்டீஸ் அனுப்பினால் கட்டாயமாக நகையைத் திருப்ப வேண்டிய அவசியமில்லை என்றும், வட்டித் தொகையைச் செலுத்திவிட்டு மாற்று ஏற்பாடுகள் மூலம் கடனை அடைக்கலாம் என்றும் அவர் அறிவுறுத்தினார். மேலும், மீண்டும் நகைக்கடன் பெறும்போது முந்தைய கடன் தொகையை விட சற்று குறைவாகவே கிடைக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.




