“இந்த விவகாரம் சுமார் 14 மாதங்களுக்கு முன்பு, அதாவது 2025 செப்டம்பர் மாதத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு குடிநீர் உற்பத்தித் தொகுதியுடன் தொடர்புடையது. எங்கள் நிறுவனத்தின் கீழ் செயல்படும் 143 உற்பத்தி ஆலைகளில் ஒன்றான கோவாவில் உள்ள பிஸ்லெரி ஆலையில் இந்தக் குடிநீர் தயாரிக்கப்பட்டது.
2025 செப்டம்பர் 30ஆம் தேதி, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI, கோவாவில் உள்ள எங்கள் உற்பத்தி ஆலையிலிருந்து ஆறு குடிநீர் மாதிரிகளைச் சேகரித்தது.
முதற்கட்ட ஆய்வில், ஆறு மாதிரிகளில் ஐந்து மாதிரிகள் அனைத்து விதமான தரநிலைகளையும் பூர்த்தி செய்திருந்தன. ஆனால், ஆறாவது மாதிரியில் ஒரு லிட்டர் குடிநீருக்கு 10 மைக்ரோகிராம் என்ற நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக, 12 மைக்ரோகிராம் அளவில் புரோமேட் (Bromate) இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, 2025 நவம்பர் 22ஆம் தேதி பிஸ்லெரி நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட குடிநீர் மாதிரியை மீண்டும் பரிசோதிப்பதற்காக FSSAI பரிந்துரை ஆய்வகத்திற்கு அனுப்பியது.
அந்த ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட மறுபரிசோதனையில், குடிநீர் மாதிரியில் இருந்த புரோமேட் அளவு நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு வரம்பிற்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், அதே மாதிரியில் பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) எனப்படும் வேதிப்பொருட்கள் இருப்பதாக அந்த ஆய்வகம் தனியாகக் குறிப்பிட்டது.
முதற்கட்ட ஆய்வு மற்றும் மறுபரிசோதனை முடிவுகளுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு குறித்து கூடுதல் விளக்கம் பெற வேண்டிய அவசியம் இருப்பதாக பிஸ்லெரி நிறுவனம் கருதியது.
இதனால், அதே குடிநீர் மாதிரியை FSSAI அங்கீகாரம் பெற்ற மற்றொரு சுயாதீன ஆய்வகத்தில் பிஸ்லெரி நிறுவனம் பரிசோதனைக்கு உட்படுத்தியது.
அந்தச் சோதனையிலும், குடிநீரில் இருந்த புரோமேட் அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த ஆய்வு முடிவுகளை FSSAI-க்கு சமர்ப்பித்த பிறகு, அந்த அமைப்பிடமிருந்து எங்களுக்கு எந்தவிதமான கூடுதல் தகவலோ அல்லது அறிவிப்போ வரவில்லை. எனவே, இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக நாங்கள் கருதினோம்.
இன்றுவரை, FSSAI தரப்பிலிருந்து மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாக எழுத்துப்பூர்வமாகவோ எந்தவொரு நோட்டீஸும் பிஸ்லெரி நிறுவனத்திற்கு கிடைக்கவில்லை. மேலும், ஊடகங்களில் குறிப்பிடப்படும் அந்த நோட்டீஸை FSSAI-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் எங்களால் கண்டறிய முடியவில்லை.
பாதுகாப்பான குடிநீரை வழங்குவது பிஸ்லெரி நிறுவனத்தின் முதன்மையான முன்னுரிமையாகும்.
எங்கள் குடிநீர் தயாரிப்பில் பின்பற்றப்படும் 10 கட்ட உற்பத்தி நடைமுறைகளில், 90-க்கும் மேற்பட்ட தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உயர்தரமான பாதுகாப்பு நடைமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறோம்.
இந்த விவகாரம் தொடர்பாக உரிய ஒழுங்குமுறை நடைமுறைகளின் அடிப்படையில் தீர்வு காண, FSSAI அமைப்புடன் தொடர்ந்து முழுமையாக ஒத்துழைப்போம்.”
– பிஸ்லெரி நிறுவனம் வெளியிட்ட விளக்கம்




