சீனாவிலிருந்து வங்கதேசம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கொமோரோஸ் நாட்டு கொடியை ஏந்திய 'எம்வி ஸ்டார் லைன்' (MV Star Line) சரக்குக் கப்பலை இந்தோனேசிய கடற்படை பறிமுதல் செய்துள்ளது. பெலவான் கடற்கரை அருகே நவம்பர் 7-ம் தேதி இடைமறிக்கப்பட்ட இந்தக் கப்பலில், ஏவுகணை மற்றும் ராக்கெட் தயாரிப்புக்குத் தேவையான 405 டன் சோடியம் பெர்குளோரேட் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வேதிப்பொருள் சுமார் 100 ஏவுகணைகளைத் தயாரிக்கப் போதுமானது என்று ரியர் அட்மிரல் டென்னி செப்டியானா தெரிவித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகிச் சென்றதாலும், ரேடியோ அழைப்புகளுக்குப் பதிலளிக்காததாலும் சந்தேகமடைந்த கடற்படையினர் கப்பலைச் சோதனையிட்டனர். இதில் 36 கொள்கலன்களில் 15 கொள்கலன்கள் இந்த வேதிப்பொருட்களால் நிரப்பப்பட்டிருந்தன. மேலும், பதிவு செய்யப்படாத லட்சக்கணக்கான சிம் கார்டுகளும் கைப்பற்றப்பட்டன. கப்பலின் பதிவு ஆவணங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது கப்பலில் இருந்தவர்களிடம், இந்த சரக்கின் தோற்றம் மற்றும் வங்கதேசத்தில் இதைப் பெறுபவர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சர்வதேச விதிமுறைகளை மீறி இந்த அபாயகரமான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டனவா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. கப்பல் நிறுவனம் அல்லது சரக்கு உரிமையாளர்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.



