லிபியாவின் பெங்காசி கடற்படை தளத்தில் நங்கூரமிட்டிருந்த ரஷ்யக் கப்பல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ந்த வெடிவிபத்தில் அழிந்தது. எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தபோது இந்தக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என லிபியாவின் கிழக்கு பகுதி அரசு சந்தேகிக்கிறது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், அந்தப் பகுதி தற்போது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
செயற்கைக்கோள் படங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான காட்சிகளின்படி, கப்பல் தீப்பிடித்து எரிந்ததும், பின்னர் பகுதியளவு நீரில் மூழ்கியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடல்சார் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்தக் கப்பல் அங்கு நிறுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவித்த கிழக்கு பகுதி அரசு, தாக்குதல் குறித்து ரஷ்ய அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறியுள்ளது.
இதனிடையே, திரிப்போலியில் உள்ள லிபியாவின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசு, வெளிநாட்டுப் படைகள் நாட்டின் உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய செயல்பாடுகள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும், நாட்டின் சொத்துக்களுக்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என அந்த அரசு கவலை தெரிவித்துள்ளது.



