இந்தியாவின் வெள்ளை காலர் (white-collar) வேலைவாய்ப்பு சந்தையில் 2027-ம் ஆண்டில் கோயம்புத்தூர் முதலிடம் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அங்கு வேலைவாய்ப்பு 12.52 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்கள் முறையே 11.29 சதவீதம் மற்றும் 10.33 சதவீத வளர்ச்சியுடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கும். 2026-ம் ஆண்டில் தேசிய அளவில் வேலைவாய்ப்பு சந்தை 3.30 சதவீத வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்திருந்த நிலையில், 2027-ல் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு 8.16 சதவீதம் அதிகரித்து, 1.38 கோடியை எட்டும் என 'பவுண்டிட் இன்சைட்ஸ் டிராக்கர்' (Foundit Insights Tracker) தெரிவித்துள்ளது.
நுகர்வோர் மின்னணுவியல், சில்லறை வர்த்தகம் மற்றும் உற்பத்தித் துறைகள் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், சுற்றுலாத் துறை 3.67 சதவீத சரிவைச் சந்திக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டில் அனுபவம் வாய்ந்த பணியாளர்களுக்கே நிறுவனங்கள் முன்னுரிமை அளித்ததாகக் குறிப்பிட்ட பவுண்டிட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தருண் சின்ஹா, தொழில்நுட்பத் திறன்களுக்கான தேவை ஐடி துறையைத் தாண்டி விரிவடைந்து வருவதாகத் தெரிவித்தார். எதிர்காலத் தேவைகளில் 20 முதல் 30 சதவீத பணியிடங்களை நிரப்ப, உற்பத்தித் திறன் சார்ந்த பணிகளுக்கும், ஊழியர்களுக்குப் புதிய திறன்களைக் கற்றுக்கொடுக்கும் பயிற்சிகளுக்கும் நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.




