திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு, நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விப்புல் பஞ்சோலி அமர்வில் இன்று விசாரணைக்கு வரவில்லை. நீதிபதிகள் அமர்வு இன்று பணியில் இல்லாததாலும், நாளை குருநானக் ஜெயந்தி விடுமுறை என்பதாலும் இந்த வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வழக்கப்படி இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் முன்னிலையிலேயே இந்த மனுவை விசாரிக்க வேண்டும் என்பதால், தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்படவில்லை.
இதனிடையே, திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் விஜய், தலைமை வழக்கறிஞர், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மற்றும் உளவுத்துறை ஐ.ஜி அஸ்ரா கர்க் ஆகியோர் பங்கேற்றனர்.
தற்போது திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதும் காவல்துறையின் தீவிர கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதோடு, 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த நிலையில், கோயில் நிர்வாகம் தீப மண்டபத்திற்கு வண்ணம் தீட்டும் பணிகளை மேற்கொண்டுள்ளது.



