நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பயன்பாடற்ற ரயில் பெட்டி ஒன்றில் 54 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 13-ம் தேதி வழக்கமான தூய்மைப் பணியின்போது அந்தப் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்த அந்தப் பெண்ணின் விரலில் இருந்த தனித்துவமான தங்க மோதிரத்தை வைத்து, சத்தீஸ்கரில் உள்ள நகைக்கடை ஒன்றின் மூலம் அவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும், மூன்று மாதங்களுக்கு முன்பு அவர் காணாமல் போனது குறித்த புகாரும் பதிவாகியிருந்தது தெரியவந்தது.
இந்தத் தடயத்தைக் கொண்டு ரயில்வே காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். ரயில் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், வெள்ளை நிற உடை அணிந்த நபர் ஒருவர் அங்கிருந்து தப்பிச் செல்வது பதிவாகியிருந்தது. அந்தப் பகுதியில் அடிக்கடி சுற்றித் திரிந்த உள்ளூர் நபர் ஒருவரை, விசாரணை தொடங்கிய ஆறு மணி நேரத்திற்குள் காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில், அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, நெஞ்சில் உதைத்துக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். குற்றவாளி வீசியெறிந்த ரத்தக்கறை படிந்த சட்டையை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.






