தமிழகத்தில் வரும் நவம்பர் 23-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 23 அன்று கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதனைத் தொடர்ந்து நவம்பர் 24-ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நவம்பர் 22-ம் தேதி நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





