இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவும் இணைந்து அயோத்தி மற்றும் ஜனக்பூர் இடையேயான புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர், இந்திய பிரதமருடன் இணைந்து காணொளி காட்சி வாயிலாக இந்த சேவையைத் தொடங்கி வைத்தார்.
சரயு - கமலா எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த வாராந்திர ரயில், கோரக்பூர், பஸ்தி, ரக்ஸால், சீதாமர்ஹி, மதுபானி மற்றும் ஜெயநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ஆன்மிகச் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரு நகரங்களை இணைப்பதன் மூலம், உள்ளூர் வணிகம் மற்றும் போக்குவரத்து சேவைகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரயில் சேவை இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார பிணைப்பையும் நட்புறவையும் வலுப்படுத்தும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார். பாரம்பரியமும் வளர்ச்சியும் இணையும் இந்த முன்னெடுப்பு, இரு நாட்டு மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.



