வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) தளத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) கீழ் இயங்கும் தேசிய சைபர் குற்ற அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு (NCTAU) எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட வாட்ஸ்அப் அமர்வுகளைப் பயன்படுத்தி, அனுமதியின்றி மற்றவர்கள் தனிப்பட்ட செய்திகள், தொடர்புகள் மற்றும் குழு உரையாடல்களை அணுக வாய்ப்புள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது மோசடிகளுக்கும், சமூக பொறியியல் தாக்குதல்களுக்கும் வழிவகுக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொது அல்லது பகிரப்பட்ட கணினிகளில் வாட்ஸ்அப் வெப் மூலம் அலுவலகம் சார்ந்த அல்லது முக்கியமான பணிகளை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு பயனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலாவியை (Browser) மூடுவதோடு மட்டும் நிறுத்தாமல், ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் முறையாக 'லாக் அவுட்' (Log out) செய்ய வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத சூழலில் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்த நேரிட்டால், இன்காக்னிட்டோ (Incognito) அல்லது பிரைவேட் பிரவுசிங் முறையைப் பயன்படுத்துமாறும், கணினியின் பாதுகாப்பு மென்பொருள் மற்றும் இயங்குதளத்தை எப்போதும் புதுப்பித்த நிலையில் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



