கடந்த ஆண்டு நடைபெற்ற 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது, இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளை சீனாவிற்குச் சொந்தமான நிங்ஷியா-14, காஃபென்-11 மற்றும் யாவோகன்-30 ஆகிய மூன்று கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்ததாக இந்திய விண்வெளி உளவு நிறுவனமான திகந்தாரா (Digantara) தெரிவித்துள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் புஜ் மற்றும் நலியா விமானப்படை தளங்கள், ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட முக்கியமான ராணுவ மற்றும் வணிகக் கட்டமைப்புகளைக் குறிவைத்து கண்காணிப்பில் ஈடுபட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்கு நாட்கள் நீடித்த இந்த மோதல் தொடங்கிய மே 7, 2025 அன்று, யாவோகன்-43 01ஜி செயற்கைக்கோள் தனது சுற்றுப்பாதையை மாற்றியமைத்ததாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவின் மேற்கு எல்லைப் பகுதிகளில் உள்ள முக்கிய ராணுவ நிலைகளை நீண்ட நேரம் கண்காணிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னதாக, பஹல்காம் பகுதியில் வழக்கத்திற்கு மாறான செயற்கைக்கோள் செயல்பாடுகள் இருந்ததையும் திகந்தாரா நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்திய கடற்படையின் மேற்கு பிராந்திய கட்டளை மையம் மற்றும் முக்கிய எரிசக்தி, வர்த்தகக் கட்டமைப்புகள் அமைந்துள்ள மேற்கு கடற்கரை பகுதி தொடர்ந்து உளவு பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.




