பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் முன்பக்கத்தில் 'அதிக கொழுப்பு', 'அதிக சர்க்கரை' அல்லது 'அதிக உப்பு' என எச்சரிக்கை லேபிள்களைக் கட்டாயமாக்க மத்திய அரசுக்கும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கும் (FSSAI) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த லேபிள்கள் அறுகோண வடிவில், நுகர்வோர் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் படங்களுடன் தெளிவாக இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.
வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு அறிவுறுத்தியுள்ளது. சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவுகளைக் கணக்கிடும்போது, சேர்க்கப்பட்ட சர்க்கரைக்கு பதிலாக மொத்த சர்க்கரை மற்றும் நிறைவுற்ற கொழுப்பு அளவுகளை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. நுகர்வோருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தாத வகையிலும், அதே சமயம் ஆரோக்கிய அபாயங்களை மறைக்காத வகையிலும் இந்த அளவீடுகள் துல்லியமாக இருக்க வேண்டும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இந்த எச்சரிக்கை வாசகங்கள் தெளிவாகத் தெரியும் வகையில் பெரிய எழுத்துருவில் அச்சிடப்பட வேண்டும் என்றும், 2020-ஆம் ஆண்டின் லேபிளிங் விதிமுறைகளை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய வரைவு விதிமுறைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை பத்து வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு ஆணையத்திற்கு நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது.




