புனேவில் உள்ள சிவாஜிநகர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே, கொலைக் குற்றச்சாட்டில் தொடர்புடைய மந்தர் மாருதி கிவாலே (35) என்பவர் இன்று மதியம் மர்ம நபர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். அரிவாளால் வெட்டப்பட்டும், துப்பாக்கியால் சுடப்பட்டும் காயமடைந்த கிவாலேயின் கை துண்டிக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய இருவர், சம்பவ இடத்திலிருந்து ஸ்கூட்டர்களில் தப்பிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் ஒரு மேகசினை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். படுகாயமடைந்த கிவாலே, உள்ளூர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த ஏப்ரல் 2025-ல் உணவக உரிமையாளர் சுபம் சுபாஷ் சவான் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய கிவாலே, நான்கு நாட்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து விடுதலையாகி நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். இந்தச் சம்பவம் குறித்து புனே காவல் ஆணையரைத் தொடர்புகொண்ட மகாராஷ்டிர துணை முதல்வர் சுனேத்ரா பவார், முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


