இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), கடுமையான பாதுகாப்பு மற்றும் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டதற்காக ஐந்து ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் உரிமங்களை இடைநீக்கம் செய்துள்ளது. வேதாந்த் ரெமெடிஸ் (Vedant Remedies), லூசிட் ஹெல்த்கேர் (Lucid Healthcare), அம்பிகோ ஆயுர்வேதிக் ஹெல்த்கேர் (Ambico Ayurvedic Healthcare), விட்டாமெடிக் ஹெல்த் நியூட்ராசூட்டிகல்ஸ் (Vitamedic Health Nutraceuticals) மற்றும் அடோரல் ஹெல்த்கேர் (Adorreal Healthcare) ஆகிய நிறுவனங்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், சுகாதாரமற்ற சூழல், பூச்சிக் கட்டுப்பாடு இன்மை மற்றும் மூலப்பொருட்களை முறையாகச் சேமிக்காதது போன்ற தீவிர குறைபாடுகள் கண்டறியப்பட்டன. மேலும், சில நிறுவனங்கள் முறையான உரிமம் இன்றி செயல்பட்டதும், காலாவதியான பொருட்களைப் பயன்படுத்தியதும், கட்டாய பாதுகாப்பு மற்றும் பரிசோதனை ஆவணங்களைப் பராமரிக்கத் தவறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அங்கீகரிக்கப்படாத இடங்களில் செயல்பட்டது மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்திடம் தவறான தகவல்களை வழங்கியது போன்ற முறைகேடுகளும் கண்டறியப்பட்டுள்ளன. ஊட்டச்சத்துத் துறையில் விதிமுறைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் FSSAI மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த உரிம ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



