கடந்த ஆண்டு நடைபெற்ற 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது, இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியை மூன்று சீன உளவு செயற்கைக்கோள்கள் கண்காணித்ததாக இந்திய விண்வெளி உளவு நிறுவனமான திகந்தாரா (Digantara) தெரிவித்துள்ளது. நிங்ஷியா-14 (Ningxia-14), காஃபென்-11 (Gaofen-11) மற்றும் யாவோகன்-30 (Yaogan-30) ஆகிய அந்த செயற்கைக்கோள்கள், ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் புஜ், நலியா விமானப்படை தளங்கள் உள்ளிட்ட முக்கியமான ராணுவ மற்றும் வணிகக் கட்டமைப்புகளைக் கண்காணித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்கு நாட்கள் நீடித்த இந்த மோதல் தொடங்கிய நாளான மே 7, 2025 அன்று, இந்த செயற்கைக்கோள்கள் தங்களின் சுற்றுப்பாதையை மாற்றியமைத்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் மூலம், இந்திய ராணுவ தளங்களை நீண்ட நேரம் கண்காணிக்கும் வசதியை அவை பெற்றன. மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னதாக, பஹல்காம் பகுதியை உற்றுநோக்க சீன செயற்கைக்கோள்கள் வழக்கத்திற்கு மாறான நகர்வுகளை மேற்கொண்டதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மேற்கு கடற்கரை பகுதி, இந்திய கடற்படை தளங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளைக் கொண்ட இந்தியாவின் மிக முக்கியமான மூலோபாய மையமாகும். உயர் தெளிவுத்திறன் கொண்ட இமேஜிங் மற்றும் மின்னணு உளவுத் திறன் கொண்ட இந்த செயற்கைக்கோள்கள், இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் அதிகாரத்திற்கு முக்கியமான பகுதிகளை இலக்கு வைத்துள்ளதாக அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

